தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தில் ஆய்வுகூடப் பயிற்சி

 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கனடா கிளையின் நிதி அனுசரணையில், “அறிவியல் அமுது” கல்வி அறக்கட்டளை முல்லைத்தீவின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு கல்வி வலயத்தில் உள்ள ஏழு 1AB தர பாடசாலைகளின் AL 2025 உயிரியல் மற்றும் கணித பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான இரண்டாம் தவணை ஆய்வுகூடப் பயிற்சிகள் தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தில் ஒக்டோபர் 12 மற்றும் 13ம் திகதிகளில் நடந்தன.

இதில் 160 மாணவர்களும் ஏழு ஆசிரியர்களும் 4 தாய்மாரும் முல்லைத்தீவில் இருந்து நான்கு பேரூந்துகளில் வந்து கலந்து கொண்டனர். வளவாளர்களாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆசிரியர்களும் மருத்துவ மற்றும் பொறியியல் பீடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர்.

முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. தமிழ்மாறன் மற்றும் ஓய்வுபெற்ற வலயக் கல்விப் பணிப்பாளரும் தொண்டைமானாறு வெளிக்கள நிலையத் தலைவருமான திரு. ரவீந்திரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மாணவர் தங்குமிடம் உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாகக் கவனித்த தொண்டைமானாறு வெளிக்கள நிலையக் கல்விப் பிரிவுப் பொறுப்பாளர் திரு. மதுசனுக்கும் இரு நாட்களும் அனைவருக்கும் சிறப்பான மதிய உணவை வழங்கிய சந்நிதியான் ஆச்சிரமத்தின் மோகன் சுவாமிகள் அவர்கட்கும் அறிவியல் அமுது கல்வி அறக்கட்டளை நன்றி தெரிவிக்கிறது.
அறிவியல் அமுது கல்வி அறக்கட்டளையோடு கரம் கோர்த்து பயணிக்கின்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கனடா கிளைக்கும் விசேட நன்றிகளைத் தெரிவிப்பதில் “அறிவியல் அமுது” கல்வி அறக்கட்டளை மனநிறைவு அடைகிறது.